ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
இலங்கை கிரிக்கெட் அணி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஐசிசி வாரியம். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை இடைநீக்கம் செய்து ஐசிசி உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஆண்கள் கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெறும் 55 ரன்களே பெற்றது. இதனை அடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டார். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்டி, அரசியல் தலையீடு இருப்பதாக ஐசிசி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
கேலோ இந்தியா: கைப்பந்து போட்டியில் தமிழக அணி முதலிடம்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 6 -வது கேலோ இந்தியா போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி, ஹரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. அதேபோல, பெண்கள் பிரிவில் குஜராத் அணியை வீழ்த்தி, தமிழக அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. நீச்சல் போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் முதலிடம் பிடித்தார். இதே போல் அடுத்த இரண்டு இடங்களையும் தமிழக வீராங்கனைகள் பிடித்தனர்- நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்). பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் மஹாராஷ்டிராவும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) உள்ளன.
AUS Vs WI: மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியை நேரில் கண்டு வர்ணனை செய்து கொண்டிருந்த மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கேப்டனான பிரைன் லாரா, தனது அணி வென்றதும் அனந்த கண்ணீர் வடித்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஞ்சி கோப்பை: சண்டிகரை வீழ்த்திய தமிழக அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில், கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில், சண்டிகர் அணியை எதிர்கொண்டது தமிழக அணி. இதில் முதல் இன்னிங்க்ஸை துவங்கிய சண்டிகர் அணி, 111 ரன்கள் பெற்ற நிலையில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய தமிழக அணி, 126.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 610 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய சண்டிகர் அணி, இரண்டாவது இன்னிங்சில் 499 ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், 71 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 206 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது அந்த அணி. இதனை அடுத்து விளையாடிய தமிழக அணி, 293 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.