ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி! சாதனை நாயகன் ஷுப்மன் கில்!
இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு, அசைக்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 108 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 40 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 கைப்பற்றியது. இதற்கிடையில், கில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் குறைந்தபட்சம் 1,000 ரன்கள் எடுத்த பேட்டர்களில் அதிக சராசரியுடன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் கில்லின் சாதனைகள்
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அவர் தனது கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். கில் தற்போது 20 ஒருநாள் போட்டிகளில் 71.38 என்ற அதிகபட்ச சராசரியில் 1,142 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியர்களில் கில்லுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 57.8 சராசரியுடன் 12,762 ரன்களுடன் உள்ளார். மேலும், கில் 107.33 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். குறைந்தபட்சம் 1,000 ஒருநாள் ரன்களைக் கொண்ட பேட்டர்களில், 100-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 50-க்கும் அதிகமான சராசரியைக் கொண்ட மற்ற ஒரே வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே.