கே.எல்.ராகுலை இந்திய அணியில் இருந்து நீக்கி விடலாமா? ChatGPT'யின் சுவாரஸ்ய பதில்!
இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கி விடலாமா என்பது குறித்த கேள்விக்கு சாட் ஜிபிடி பதிலளித்துள்ளது. கடைசியாக நடந்த வங்கதேச தொடர், தற்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடர் என தொடர்ச்சியாக கே.எல்.ராகுல் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை நீக்குவது குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிசிசிஐக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடியிடம் கேள்வியெழுப்பிய ரசிகர்கள்
துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும், அவரை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்ற குரல்கள் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், கே.எல்.ராகுல் செயல்திறனை சரியாக புரிந்து கொள்ள சிலர் சாட் ஜிபிடியின் உதவியை நாடியுள்ளனர். கே.எல்.ராகுலை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி விடலாமா என கேள்வியெழுப்பியதற்கு, இது குறித்து செயற்கை நுண்ணறிவு தளமாக தன்னால் சரியான பதிலை தரமுடியாது எனத் தெரிவித்துள்ளது. மேலும் கே.எல்.ராகுலின் தற்போதைய செயல்பாடு, டெஸ்ட் அணியில் வீரரின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மனதில் வைத்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ராகுலுக்கு பதிலாக கில் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.