Loading...
சாண்ட்பேப்பர் சர்ச்சையில் கவாஜாவை நட்டாற்றில் விட்ட பேட் கம்மின்ஸ்: மேத்யூ ஹைடன் சாடல்
கவாஜாவை நட்டாற்றில் விட்ட பேட் கம்மின்ஸ் என மேத்யூ ஹைடன் சாடல்

சாண்ட்பேப்பர் சர்ச்சையில் கவாஜாவை நட்டாற்றில் விட்ட பேட் கம்மின்ஸ்: மேத்யூ ஹைடன் சாடல்

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
11:53 am

செய்தி முன்னோட்டம்

2018-ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்டில் நடந்த 'சாண்ட்பேப்பர் கேட்' பந்து சேதப்படுத்தும் விவகாரம் மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உஸ்மான் கவாஜா தனது 'சப்ர்' என்ற சுயசரிதையில், பந்து சேதப்படுத்தப்பட்ட விஷயம் பந்துவீச்சாளர்கள் உட்பட அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை முற்றிலுமாக மறுத்த கேப்டன் பேட் கம்மின்ஸ், கவாஜா தங்களது நட்பையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் அலட்சியமாகக் கையாண்டுவிட்டதாகச் சாடினார். இந்நிலையில், கம்மின்ஸ் தனிப்பட்ட நட்பு விவகாரங்களைப் பொதுவெளியில் இழுத்து கவாஜாவை நட்டாற்றில் விட்டுவிட்டதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முற்றும் மோதல்

"கம்மின்ஸ் கையாண்ட விதம் தவறானது"

ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய மேத்யூ ஹைடன், கவாஜாவின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களைக் கம்மின்ஸ் கையாண்ட விதம் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிட்னியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேட் கம்மின்ஸ், சாண்ட்பேப்பர் சதித்திட்டத்தில் தனக்கும் சக பந்துவீச்சாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது முழுமையான அபத்தம் என மறுத்திருந்தார்.

மேலும், கவாஜா உண்மையிலேயே நல்ல நண்பராக இருந்தால், கேமரூன் பான்கிராஃப்ட் சாண்ட்பேப்பர் பயன்படுத்துவதை அறிந்த உடனேயே தடுத்து நிறுத்தியிருப்பார் என்றும் கம்மின்ஸ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹைடன் எச்சரிக்கை

"இந்திய சுற்றுப்பயணத்திலும் சர்ச்சை துரத்தும்"

இந்த விவகாரம் குறித்து இனி எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை என பேட் கம்மின்ஸ் கூறியிருப்பது வெறும் பகற்கனவு மட்டுமே என மேத்யூ ஹைடன் சாடியுள்ளார்.

அடுத்த ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரும்போது, இந்திய ஊடகங்கள் இந்தச் சர்ச்சையை நிச்சயம் எழுப்பும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓய்வறையின் மனநிலையைச் சீண்டுவதற்கு இது ஒரு முக்கிய ஆயுதமாக மாறிவிட்டதால், இந்தச் சர்ச்சை அவ்வளவு எளிதில் ஓயாது என்றும் ஹைடன் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT