சாம் கர்ரனுக்கு உற்சாக வரவேற்பு: ட்விட்டரில் காணொளி வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியால் வாங்கப்பட்ட நிலையில், 2023 சீசனுக்கு முன்னதாக அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். 2022 டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் கர்ரன் Rs.18.5 கோடிக்கு வாங்கப்பட்டார். இதற்கு முன்பு 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஹாட்ரிக் உட்பட 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் அவர் 2020 மற்றும் 2021 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதோடு, 2021 இல் சென்னை தனது நான்காவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவினார். பின்னர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை தவறவிட்டார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த சாம் கர்ரன்
காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்குத் திரும்பினார். இங்கிலாந்துக்கு இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தனது ஆல்ரவுண்ட் திறன்களால் பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் பட்டத்தை வெல்ல சாம் கர்ரன் உதவுவார் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் சாம் கர்ரனை வரவேற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.