கேப்டனாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி : தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தனது நான்காவது வெற்றியை நிறைவு செய்தார். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இந்நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம், இந்திய கேப்டனாக தனது முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரோஹித் சமன் செய்தார்.
டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மாவின் செயல்திறன்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தனது முதல் தொடரிலேயே இந்தியாவுக்கு 2-0 என்ற கணக்கில் வெற்றியைத் தேடித்தந்தது தொடரை வென்றார். பின்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், 2022 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டைத் தவறவிட்டார். பின்னர் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் அவரை டிசம்பரில் வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றியது. இதனால் கேப்டனான பிறகு நீண்ட காலம் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்த ரோஹித் சர்மா தற்போது மீண்டு வந்து, இந்திய அணிக்கு வெற்றியை குவித்து வருகிறார்.