மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மந்தனா முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். மகளிர் டி20 போட்டிகளில் ஏழாவது அதிக ரன்கள் அடித்தவர் என்ற சிறப்பை கொண்டுள்ள மந்தனா, இந்திய மகளிர் அணிக்காக 27.32 சராசரியில் 2,651 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் 17 ஆட்டங்களில், மந்தனா 18.62 என்ற சொற்ப சராசரியை 298 ரன்கள் எடுத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்
மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசனில் ஆர்சிபியை வழிநடத்தும் முதல் கேப்டனாக மந்தனா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை 11 மகளிர் சர்வதேச டி20களில் இந்திய அணியை வழிநடத்தி, ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இந்த 6 போட்டிகளில் மந்தனா 24.87 என்ற சராசரியை 199 ரன்கள் எடுத்தார். இந்த எண்ணிக்கையில் ஒரு அரைசதம் அடங்கும். மேலும் லீக் போட்டிகளில், அவரது தலைமையின் கீழ், டிரெயில்பிளேசர்ஸ் மகளிர் டி20 சேலஞ்சின் 2020 கோப்பையை வென்றுள்ளது. மகளிர் ஐபிஎல்லின் முதல் ஆட்டம் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.