பிரெஞ்சு ஓபனிலிருந்து வெளியேறிய நடால்! 2024இல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற திட்டம்!
ரஃபேல் நடால் வியாழக்கிழமை (மே 18) 2023 பிரெஞ்ச் ஓபனிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காத ரஃபேல் நடால் அடுத்த சில மாதங்கள் ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நடால், 2024 சீசனில் உடல் தகுதியுடன் இருப்பதற்காக அதிக நேரம் ஒதுக்குவதாகக் கூறியதோடு, அவரது டென்னிஸ் வாழ்க்கையில் அது கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்புண்டு எனக் கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாகவே காயம் மற்றும் இடுப்பு வலியால் அவ்வப்போது அவதிப்பட்டு வரும் நடால், சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.
டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய ரஃபேல் நடால்
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரஃபேல் நடால், பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததோடு, உடல்ரீதியாக தற்போது சிக்கலை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் தனது புகழ்பெற்ற டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், 2024 க்குள் முழுமையாக தகுதி பெற்று முக்கியமான விம்பிள்டன் போட்டிகளில் விளையாட உறுதி பூண்டுள்ளார். இதன் மூலம் நல்ல வெற்றியுடன் டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்கிடையே, பிரெஞ்சு ஓபன் என அழைக்கப்படும் ரோலண்ட் க்ராஸ் போட்டியை நடத்தும் நிர்வாகம், நடால் வெளியேறியுள்ளது தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.