இம்ரான் கான் பற்றிப் பேச பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: PCB அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜாவேத் மியாண்டாத் மற்றும் மொயீன் கான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 1992-ல் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான இம்ரான் கான் குறித்து ஊடகங்களிலோ அல்லது வெளிப்படையாகவோ எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது எனப் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
சர்ச்சை வெடித்தது எப்படி?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் போது, பிரபல விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ், இம்ரான் கானின் மகன்களுடனான நேர்காணல் ஒன்றை ஒளிபரப்பியது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன், லார்ட்ஸ் மைதானத்தின் எழுத்தாளர்கள் அறையில் இம்ரான் கானின் மகன்களை சந்தித்து பேட்டி கண்டார்.
இந்த நேர்காணலில், சிறையில் உள்ள தங்கள் தந்தை இம்ரான் கான் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அவரது மகன்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த நேர்காணல் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
பிசிபி
போட்டியை புறக்கணிக்க போவதாக PCB மிரட்டல்?
ஸ்கை ஸ்போர்ட்ஸ் இந்த நேர்காணலை ஒளிபரப்பக் கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடுக்க முயன்றதாகவும், மீறி ஒளிபரப்பினால் போட்டியை புறக்கணிப்போம் என மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
இருப்பினும், PCB-யின் இந்த முயற்சி தோல்வியடைந்ததுடன், பாகிஸ்தான் வீரர்கள் வழக்கம் போல் மைதானத்திற்கு திரும்பினர்.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் போட்டியை புறக்கணிக்கும் திட்டம் குறித்து கேட்கப்பட்ட போது, "அப்படி எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்" என்று பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமது தெரிவித்தார்.
தூதரக உறவுகள்
தூதரக உறவுகள் காரணமாக தப்பிய சர்ச்சை
பிசிபி இந்த விவகாரத்தில் கடுமையான கோபமடைந்த போதிலும், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், செப்டம்பர் 2 அன்று மன்னர் சார்லஸ் உடன் பாகிஸ்தான் அணிக்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கிய சந்திப்பை கருத்தில் கொண்டும், இந்த சர்ச்சையை பெரிதுபடுத்தாமல் அமைதி காப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் வீரர்கள் எவரும் செய்தியாளர் சந்திப்பிலோ அல்லது தனிப்பட்ட பேட்டிகளிலோ இம்ரான் கான் குறித்துப் பேசக் கூடாது எனப் பிசிபி தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.