இதே நாளில் அன்று : சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தினம்
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 7அன்று இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அப்போதைய நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை (எம்ஐ), சீசனின் முதல் போட்டியில் தோற்கடித்தது. ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக 2016 மற்றும் 2017 இல் இரண்டு வருட தடையை அனுபவித்துவிட்டு மீண்டும் ஐபிஎல்லுக்குத் திரும்பிய சிஎஸ்கே, தோனி தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியது. அப்போதைய நடப்பு சாம்பியன் எம்ஐ'க்கு எதிராக சீசனின் முதல் நாளில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தார். எம்ஐ ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர் சுதாரித்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
2018 தொடரையும் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவில் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாஹர் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால், 13 ஓவர்களில் ஸ்கோர் 84/6 என்ற நிலையில் தடுமாறியது. ஆனால் அதன் பிறகு வந்த டுவைன் பிராவோ ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். பிராவோ 68 ரன்கள் குவித்தக நிலையில், சிஎஸ்கே கடைசியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2018 தொடரில் சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை முன்னேறி மூன்றாவது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது. இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஐபிஎல் 2023 சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.