'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அஜிங்க்யா ரஹானேவை பாராட்டியுள்ளார். 2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஜிங்க்யா ரஹானே 11 இன்னிங்ஸ்களில் 172.49 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 326 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். இதன் மூலம் ஆங்கர் பேட்டர் என்ற அடையாளத்தை அஜிங்க்யா ரஹானே தகர்த்தெறிந்துள்ளார். இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் அஜிங்க்யா ரஹானே முக்கிய பங்காற்றியுள்ளதாக பாராட்டி உள்ளார்.
அஜிங்க்யா ரஹானே குறித்து ஸ்டீபன் ஃப்ளெமிங் பேசியது என்ன?
ஸ்டீபன் ஃப்ளெமிங் ரஹானே குறித்து கூறுகையில், "எனது புரிதல் என்னவென்றால், அவரது மனதில் இருந்த ஆங்கர் பேட்டர் என்ற அடையாளத்தை நாங்கள் அகற்றிவிட்டோம். அது அவரது மனதில் உறுத்தி வந்தாலும், இந்த முறையும் அதேபோல் இருக்க அவர் தன்னை அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் ரஹானேவை விளையாடும் 11'இல் சேர்ப்பது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் மும்பையுடனான ஆட்டம் உண்மையில் அவரது திறனை முழுமையாக வெளிப்படுத்தியது. இது போட்டியில் நாங்கள் பெற்ற சிறந்த வெற்றிகளில் ஒன்றாகும். இதன் மூலம் நம்பர் 3 இடத்தை அவர் உறுதிப்படுத்தினார்." என்று தெரிவித்துள்ளார்.