இதே நாளில் அன்று : 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் வரலாறு படைத்த டிராவிட்-லக்ஷ்மண் ஜோடி
மார்ச் 14, 2001, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன நிலையில், இந்தியாவின் இரண்டு நட்சத்திர பேட்டர்கள் ஒரு நாள் முழுவதும் பேட் செய்து வரலாற்று சிறப்புமிக்க மறுபிரவேசத்தை இந்திய ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. பின்னர் கொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்களை குவித்தது. சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா பாலோ ஆன் ஆனது. மேலும் இரண்டாவது இன்னிங்சிலும் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களில் தத்தளித்த நிலையில், ராகுல் டிராவிட்டுடன் கைகோர்த்து விவிஎஸ் லக்ஷ்மண் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கினார்.
பாலோ ஆன் ஆகியும் வெற்றி பெற்ற இந்தியா
லக்ஷ்மண் மற்றும் டிராவிட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி 376 ரன்களை கூட்டாக எடுத்தனர். விவிஎஸ் லக்ஷ்மண் முச்சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 281 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் டிராவிட் 181 ரன்களில் வெளியேறினார். 657 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி கடைசி நாளில் டிக்ளேர் செய்தது. ஹர்பஜன் சிங்கின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 212 ரன்களில் ஆல் அவுட் ஆகி 171 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் பாலோ ஆன் ஆகியும் இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகப்பெரிய பங்கை டிராவிட் மற்றும் லக்ஷ்மண் கொண்டிருந்தனர்.