ரோஹித் சர்மா உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும் : கபில்தேவ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றிகளை குவித்து வந்தாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நாக்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ரோஹித் சதம் அடித்திருந்தார்.
ரோஹித்தின் உடல்தகுதியை கோலியுடன் ஒப்பிடும் கபில்தேவ்
கடந்த சில வாரங்களாக, பலரும் ரோஹித்தின் உடற்தகுதி குறித்து விவாதித்து வந்த நிலையில், ஏபிபி செய்தியில் நடந்த ஒரு உரையாடலின் கபிலிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கபில்தேவ் ரோஹித் தனது எடையில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு கேப்டனாக உடல் எடையை பேணுவது அவசியம் என்றும் ரோஹித் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார். மேலும் விராட் எப்போதும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நிலையில், அதை ஒப்பிட்டு, ஃபிட்னெஸை சரியாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.