டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் : கேன் வில்லியம்சன் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். இதற்கு முன்மாக ராஸ் டெய்லர் இந்த சாதனையை தக்கவைத்திருந்தார். இதற்கிடையே இந்த போட்டியில் வில்லியம்சன் தனது 26வது சதத்தையும் அடித்தார். கேன் வில்லியம்சனின் அபார ஆட்டம் முதல் இன்னிங்சில் ஃபாலோ-ஆன் பெற்ற நியூசிலாந்துக்கு வலுவான நிலையை கொடுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் புள்ளி விபரம்
கேன் வில்லியம்சன் 2010இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வில்லியம்சன் 92 டெஸ்டில் 53.33 சராசரியுடன் 7,787 ரன்களைக் குவித்துள்ளார். நியூசிலாந்து அணியில் தற்போது வில்லியம்சன், டெய்லர் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகிய மூன்று பேர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களாக உள்ளனர். நியூசிலாந்தின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பிளெமிங் 7,172 ரன்களை எடுத்திருந்தார். இதற்கிடையே, வில்லியம்சன் 26வது டெஸ்ட் சதத்தை அடித்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 சதங்களுக்கு மேல் அடித்த ஒரே நியூசிலாந்து பேட்டராக அவர் உள்ளது குறிப்பிடத்தது.