ஜடேஜா பந்தை சேதப்படுத்திய விவகாரம்! அபராதம் விதித்தது ஐசிசி!
நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர், வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவுப் பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.20ஐ ஜடேஜா மீறியது கண்டறியப்பட்டது. இது விளையாட்டின் நெறிமுறைக்கு முரணான நடத்தையைக் காட்டுவது தொடர்பானது. அபராதம் தவிர, ஜடேஜாவின் ஒழுங்குமுறை குறியீட்டில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றம் இதுவாகும்.
ரவீந்திர ஜடேஜா மீதான குற்றச்சாட்டு : நடந்தது என்ன?
பிப்ரவரி 9 அன்று ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் 46 வது ஓவரின் போது, ஜடேஜா தனது ஆள்காட்டி விரலில் ஒரு கிரீம் தடவுவியுள்ளார். வீடியோ காட்சிகளில், அவர் முகமது சிராஜின் உள்ளங்கையில் இருந்து ஒரு பொருளை எடுத்து அதை தனது இடது கையின் ஆள்காட்டி விரலில் தேய்ப்பது போல் தோன்றியது. ஜடேஜா தனது பந்துவீச்சு கையின் ஆள்காட்டி விரலில் உள்ள வீக்கத்திற்கு கிரீம் தடவுவதாக இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்றாலும், கள நடுவர்களின் அனுமதியின்றி இது நடந்துள்ளது. மேலும் ஜடேஜா குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு ஐசிசி எடுக்கும் நடவடிக்கையை ஏற்பதாக கூறினார். இதையடுத்து ஐசிசி அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கியுள்ளது.