வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அபார வெற்றி
சிட்டகாங்கில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அயர்லாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. எனினும் வங்கதேச ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றிருந்தால். அயர்லாந்து தொடரை 1-2 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் இழந்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடந்த மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வங்கதேச அணியில் ஷமீம் ஹுசைன் மட்டும் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதன் மூலம் வங்கதேச அணி 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களில் சுருண்டது. அயர்லாந்து அணியின் மார்க் அடேர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பால் ஸ்டிர்லிங்கின் அபார அரைசதத்தால் அயர்லாந்து வெற்றி
125 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் அபாரமாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அயர்லாந்து அணி 14 ஓவர்களிலேயே வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இழந்தாலும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது போட்டியின் ஆட்ட நாயகனாக பால் ஸ்டிர்லிங்கும், தொடர் நாயகனாக தாஸ்கின் அகமதுவும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஏப்ரல் 4 ஆம் தேதி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன.