Loading...
இளம் வீரர்களுக்கு ஓபனிங் வாய்ப்பு, மிடில் ஆர்டரில் ருதுராஜ், சாம்சன்: சிஎஸ்கே நிர்வாகத்தின் மெகா வியூகம்
2027 ஐபிஎல் தொடரில் ருதுராஜ், சாம்சனை மிடில் வரிசையில் களமிறக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.

இளம் வீரர்களுக்கு ஓபனிங் வாய்ப்பு, மிடில் ஆர்டரில் ருதுராஜ், சாம்சன்: சிஎஸ்கே நிர்வாகத்தின் மெகா வியூகம்

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களாகப் பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் தடுமாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2027 சீசனுக்காக தனது பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. மிடில் ஆர்டர் சொதப்பலே தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை மிடில் வரிசையில் களமிறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிஎஸ்கே நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தற்போது நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் இருவரும் 4-வது இடத்தில் களமிறங்கி தீவிரமாகப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஓபனிங் வாய்ப்பு

மாறும் சிஎஸ்கே பேட்டிங் வரிசை

பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகிய புதுமுகத் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித்தந்த பாணியை சிஎஸ்கேவும் கையில் எடுத்துள்ளது.

அதன்படி, ஐபிஎல் 2027 சீசனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் உர்வில் படேல் ஆகிய இளம் பேட்டர்களைத் தொடக்க வீரர்களாக களமிறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ், லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் களமிறங்குவதால் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை மிகவும் பலமிக்கதாக மாறியுள்ளது.

பந்துவீச்சுக்கு குறி

ரூ.28.05 கோடி தொகையுடன் ஏலத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

பேட்டிங் வரிசை இடங்கள் முழுமையாகத் தயாராகிவிட்ட நிலையில், இனி பந்துவீச்சுப் படையை பலப்படுத்துவதில் மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

குஜராத் டைடன்ஸ் அணியிடமிருந்து சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாய் கிஷோரை டிரேடிங் முறையில் வாங்கப் பேச்சுவார்த்தை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், மினி ஏலத்திற்கு ரூ.28.05 கோடி கையிருப்புத் தொகையுடன் செல்லும் சிஎஸ்கே, தீபக் சஹார், டிரெண்ட் போல்ட், மதீஷா பதிரனா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரில் சிறந்த பந்துவீச்சாளர்களை வாங்கி அணியை முழுமைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT