கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்
காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸின் தொடக்க ஆட்டத்தில் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் போட்டியில் பேட்டிங் செய்ய வரவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2), அவர் விலகியதை குஜராத் டைட்டன்ஸ் அணி உறுதிப்படுத்தியது. முன்னதாக, டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷனகாவின் டி20 புள்ளிவிபரங்கள்
கேன் வில்லியம்சன் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி தசுன் ஷனகாவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காத தசுன் ஷனகா இந்த ஒப்பந்தம் மூலம் ஐபிஎல்லில் நுழைந்துள்ளார். அடிப்படையில் பேட்டிங் ஆல்ரவுண்டரான தசுன் ஷனகா இதுவரை 181 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 141.94 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,702 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 8.8 என்ற எகானமியுடன் 59 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, அவர் 187.87 ஸ்ட்ரைக் ரேட்டில் 124 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.