மீண்டும் திரும்பியுள்ள பவர்பிளே கிங் தீபக் சாஹர்: சிஎஸ்கே அணிக்கு பலம் கொடுக்குமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) காயம் காரணமாக கடந்த சீசனில் பங்கேற்காத நிலையில், இந்த சீசனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் 2018 இல் இணைந்ததிலிருந்து சிஎஸ்கேவுக்கு பவர்பிளேயில் முக்கிய வீரராக திகழ்வதோடு, சிஎஸ்கே அணிக்காக அதிக பவர்பிளே விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையை கொண்டுள்ளார். 2018இல் இருந்து 58 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக வீழ்த்தியுள்ள சாஹர், பவர்பிளே ஓவர்களில் மட்டும் 44 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது 2018 க்குப் பிறகு ஐபிஎல்லில் எந்த ஒரு பந்து வீச்சாளரை விடவும் அதிகம் ஆகும். இந்த விஷயத்தில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரென்ட் போல்ட் சாஹருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆறாவது அதிக விக்கெட்டுகள்
சிஎஸ்கே அணிக்காக 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹர், டுவைன் பிராவோ (154), ரவிச்சந்திரன் அஷ்வின் (120), ரவீந்திர ஜடேஜா (114), அல்பி மோர்கல் (91), மற்றும் மோகித் ஷர்மா (69) ஆகியோருக்குப் பின் சிஎஸ்கேவுக்காக ஆறாவது அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். இந்த முறை அவர் சிறப்பாக செயல்பட்டால் மோஹித் சர்மாவை மிஞ்சலாம். ஐபிஎல் பவர்பிளே விக்கெட்கள் எண்ணிக்கையில், அவர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் (57), ஜாகீர் கான் (57), சந்தீப் ஷர்மா (55), அஷ்வின் (50), மற்றும் தவல் குல்கர்னி (46) ஆகியோருக்குப் பின் அவர் இருக்கிறார். இந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டால் புவனேஷ்வர் குமாரை மிஞ்சி முதலிடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.