இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடர் : இந்திய அணி வீரர்களின் சாதனையும் சறுக்கலும்!
சொந்த மண்ணில் வெற்றிப் பயணத்தை தொடரும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் சரிக்கு சமமாக மோதிய நிலையில், மூன்றாவது போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் சேர்த்து வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்த ஷுப்மான் கில், மூன்றாவது போட்டியில் 63 பந்துகளில் 126* ரன்கள் எடுத்தார். டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர் தனது கடைசி ஏழு சர்வதேச போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவின் வொயிட் பால் அணியின் ஓபனராக தனது நிலையை உறுதிப்படுத்தியதாக தெரிகிறது.
ஏமாற்றிய கிஷன்! அசத்திய ஆல் ரவுண்டர்கள்!
கில் அசத்திய அதே வேளையில், மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் மூன்று ஆட்டங்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பியுள்ளதால், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், அணியில் கிஷன் இடம்பிடித்ததால், பிரித்வி ஷாவுக்கு இந்தத் தொடரில் ஒரு ஆட்டம் கூட கிடைக்கவில்லை. அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, ஆல்ரவுண்டராகவும் அசத்தியுள்ளார். மூன்று ஆட்டங்களில் 6.73 எகானாமியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 66 ரன்களும் எடுத்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் 60 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை 5.57 எகானாமியில் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தனது முதல் டி20 அரைசதத்தை தொடக்க ஆட்டத்தில் பதிவு செய்தார்.