IND vs AUS Test : ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணம் பிக்பாஷ் லீக் தான் : முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற மிக மோசமான தோல்விக்கு உள்ளூர் லீக் போட்டியான பிக்பாஷ் லீக்கிற்கு கொடுத்த அதிக முக்கியத்துவம் தான் காரணம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 1998 ஆம் ஆண்டு பெங்களூருவில் தனது முதல் டெஸ்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் டேரன் லீமேன், 2017 புனே டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் மிக முக்கியமான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு தயாராகும் வகையில் இந்தியா வந்து பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காமல், வீரர்களை பிக்பாஷ் லீக்கில் தொடர அனுமதித்தது ஏன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளளார்.
டேரன் லீமேன் பேட்டியின் முழு விபரம்
லீமேன் தனது பேட்டியில் கூறியிருப்பது பின்வருமாறு :- கடந்த முறை இந்திய டெஸ்ட் தொடரில் பயிற்சி போட்டிகளால் நன்மையையும் கிடைக்கவில்லை எனக் கூறி இந்த முறை தவிர்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியிருக்க வேண்டும். பயிற்சி ஆட்டத்தில் ஆடும்போது நீண்ட நேரம் வெப்பத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியை பெறலாம். அப்படி செய்திருந்தால் டெஸ்ட் போட்டியில் ஆடுவது மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் பிக்பாஷில் கவனம் செலுத்தினர். மேலும் முதல் டெஸ்டில் ஹெட் விளையாடாதது கேலிக்குரியது. அவரை பயன்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, டெல்லியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் மேத்யூ ரென்ஷா அல்லது டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவால் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.