INDvsAUS : தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது இந்தியா
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் தொடர் நாயகன்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் டிராபியை 2016-17 முதல் தொடர்ச்சியாக நான்காவது முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதற்கிடையே நியூசிலாந்து-இலங்கை இடையேயான போட்டியில் இலங்கை தோல்வியைத் தழுவிய நிலையில், இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா : நான்காவது டெஸ்ட் போட்டி ஹைலைட்ஸ்
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீனின் அபார சதங்கள் மூலம் 480 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஷுப்மன் கில், விராட் கோலியின் சதங்கள் மற்றும் அக்சர் படேலின் அரைசதம் மூலம் 571 ரன்கள் குவித்தது. 91 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களுடன் களத்தில் இருந்ததன் மூலம் போட்டி டிராவில் முடிந்தது.