ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்திய மகளிர் அணி
செய்தி முன்னோட்டம்
ஏஎஃப்சி 17 வயதுக்குட்பட்டோர் (யு-17) மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுத் தொடரில் குரூப்-இ பிரிவில் உள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆசிய கோப்பைக்குத் தகுதிபெறும் வரலாற்று மைல்கல்லை எட்டும் நோக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசிய அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா மற்றும் மலேசியா ஆகிய இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தின் முடிவே ஆசிய கோப்பைக்கான ஒரே இடத்தைப் பிடிக்கப்போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கவுள்ளது.
தகுதி சுற்று
16 கோல்கள் அடித்து முன்னிலையில் இந்தியா
இந்திய யு-17 மகளிர் அணி அபார கோல் வித்தியாசத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் ஈராக்கை 14-0 என வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள், அடுத்த போட்டியில் சிரியாவை 2-0 என்ற கணக்கில் வென்றனர்.
இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூட தராமல் 16 கோல்களை அடித்து அசத்தியுள்ளனர்.
மலேசியாவுக்கு எதிரான போட்டியை 'டிரா' செய்தாலே இந்திய அணி ஆசிய கோப்பைக்குத் தகுதிபெறும் என்ற சூழல் நிலவினாலும், "வெற்றியே இலக்கு, டிராவை நோக்கி ஆட மாட்டோம்" எனத் தலைமைப் பயிற்சியாளர் ஜோகிம் அலெக்சாண்டர்சன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தகுதிபெறும் வாய்ப்பு
அனுஷ்கா குமாரியின் 7 கோல்கள் மற்றும் அனுபவக் குழு
இந்திய அணியில் 15 வயதான அனுஷ்கா குமாரி முக்கியப் பங்கு வகித்து, அணியின் 16 கோல்களில் 7 கோல்களை அடித்துள்ளார்.
மேலும், முந்தைய ஆசிய கோப்பையில் காலிறுதி வரை சென்ற அணியில் இடம்பெற்றிருந்த கேப்டன் அபிஸ்தா பஸ்னத் உட்பட 13 அனுபவ வீராங்கனைகள் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர் ஆட்டங்களால் ஏற்பட்ட சோர்வை நீக்க உடற்பயிற்சிகள் மூலம் கவனம் செலுத்திய பயிற்சியாளர், மலேசியாவை எதிர்கொள்ளும் உத்திகளை வகுத்துள்ளார்.
இப்போட்டியில் வென்று தகுதிபெற்றால், எந்தவொரு வயதினருக்கான பிரிவிலும் தொடர்ந்து இரண்டு முறை ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய அணி என்ற வரலாற்று சாதனையை மகளிர் அணி படைக்கும்.