பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி
டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிங்க்-பால் டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இதற்கு முன்னர் விளையாடிய பிங்க்-பால் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய அணி இதுவரை நான்கு பிங்க்-பால் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது போட்டி ஒட்டுமொத்தமாக அணியின் ஐந்தாவது போட்டியாகும். இந்தியா இதுவரை வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளை பிங்க்-பால் டெஸ்டில் வீழ்த்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் வங்கதேசத்திற்கு எதிராக முதல் பிங்க்-பால் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
பிங்க்-பால் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த ஒரே போட்டி
பிங்க்-பால் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டியில்தான் தோல்வி அடைந்தது. 2020 டிசம்பரில் நடந்த அந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடியது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அடிலெய்டு மைதானத்தில் அதே டிசம்பரில் மாதத்தில் இந்தியா தோல்விக்கு பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச அளவில், இதுவரை 22 பிங்க்-பால் போட்டிகள் நடந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளிலுமே வெற்றி அல்லது தோல்வியை பெற்றுள்ள நிலையில், ஐந்து போட்டிகள் மட்டுமே இறுதி நாட்கள் வரை விளையாடப்பட்டுள்ளது.