நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி! தொடரையும் வென்றது இந்தியா!
மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. புதன்கிழமை (பிப்ரவரி 1) நடந்த மூன்றாவது போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, ஷுப்மான் கில்லின் அபார சதம் (126*) மற்றும் ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால், 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர், பேட் செய்த நியூசிலாந்து பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு சுருண்டது. ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது டி20யில் படைக்கப்பட்ட புது சாதனைகள்
இந்திய அணியின் ஷுப்மான் கில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்ததோடு, இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் இஷ் சோதி இந்திய அணிக்கு எதிராக டி20யில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையை படைத்ததோடு, ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவை தவிர, டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா இப்போது 14-10 வெற்றி-தோல்வி சாதனையை சொந்தமாக்கியுள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி நான்கு டி20 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் கடைசி தொடர் தோல்வி பிப்ரவரி 2019 இல் நடந்தது. அதில் இந்தியா 1-2 என தோற்றது.