LOADING...
INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி
வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா அபார வெற்றி

INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2025
08:04 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கன்டெராவில் உள்ள கார்ரா ஓவலில் நடந்த இப்போட்டியில், இந்தியப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் ஆஸ்திரேலியாவைத் திணறடித்தது. இதில் வாஷிங்டன் சுந்தர் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அபிஷேக் சர்மா விரைவாக 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 46 ரன்களைச் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா பேட்டிங் வீழ்ச்சி

இன்னிங்ஸின் இறுதியில் அக்சர் படேல் அதிரடி காட்டி, இந்தியாவைச் சவாலான 167 ரன்கள் எடுக்க உதவினார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட்டின் பங்களிப்பால் நல்ல தொடக்கத்தைப் பெற்றது. ஆனால், ஷார்ட் ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் சீட்டுக் கட்டு போல சரிந்தது. அக்சர் படேல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர், ஷிவம் துபே முக்கியமான மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் துரத்தலைத் தகர்த்தார். இறுதியாக, வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியா மீண்டு வர எந்த வாய்ப்பும் கொடுக்காமல், இந்தியாவுக்கு 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தார்.