INDvsAUS 2வது T20I: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் MCG மைதானத்தில் களமிறங்குகிறது இந்தியா
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம், புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற உள்ளது. முன்னதாக, புதன்கிழமை அன்று நடைபெற்ற தொடக்கப் போட்டி, இந்தியா 9.4 ஓவர்களில் 97 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மழை காரணமாகக் கைவிடப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, நவம்பர் 2022 க்குப் பிறகு முதன்முறையாக மெல்போர்ன் மைதானத்திற்குத் திரும்புகிறது. அப்போது நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை வென்றது. இந்த இரண்டாவது ஆட்டத்தைக் காண சுமார் 90,000 ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறக்க முடியாத இன்னிங்ஸ்
விராட் கோலியின் மறக்க முடியாத இன்னிங்ஸ்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடியதையும், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதையும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணிக்குச் சாதகமான சாதனை உள்ளது. இதுவரை இங்கு விளையாடிய ஆறு டி20 போட்டிகளில், நான்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களும் மெல்போர்னில் ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் விளையாட ஆர்வமாக உள்ளனர். ஆட்டத்திற்கு முந்தைய நாள் பேசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ், "மெல்போர்னில் திரளும் பிரம்மாண்டமான ரசிகர் கூட்டத்தின் மத்தியில் விளையாடுவது மிகவும் உற்சாகமான அனுபவம். இந்த ஆட்டம் குறித்து நாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.