LOADING...
வரலாற்றுச் சாதனை: 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி
400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி

வரலாற்றுச் சாதனை: 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2025
07:01 pm

செய்தி முன்னோட்டம்

லக்னோவில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஏ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் அபாரச் சதங்களின் உதவியுடன், 412 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கைத் துரத்தி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. ஏ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய முதல் அணி என்ற மாபெரும் சாதனையை இதன் மூலம் இந்தியா ஏ அணி பதிவு செய்தது. போட்டியின் கடைசி நாளில், இந்திய அணியின் வெற்றிக்கு ராகுல் மற்றும் சுதர்சனின் பொறுப்பான ஆட்டம் அடித்தளமிட்டது.

முன்னிலை

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றும் ஆஸ்திரேலியா தோல்வி

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கே.எல்.ராகுல் 210 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 176 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், தமிழக வீரரான சாய் சுதர்சன் 172 பந்துகளில் 100 ரன்கள் எடுத்துச் சதம் விளாசி வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இவர்களுடன் கேப்டன் துருவ் ஜுரேல் 56 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். முன்னதாக, ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்தது. அதற்குப் பதிலளித்த இந்தியா ஏ அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 226 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, 185 ரன்களுக்குச் சுருண்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.