IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த கே.எல்.ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டார். இதேபோல் ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கிய இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய மேத்யூ குஹ்னெமன்
ஆஸ்திரேலிய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய நிலையில், மேத்யூ குஹ்னெமன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும், டோட் முர்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய வீரர்களில் விராட் கோலி அதிகபட்சமாக 22 ரன்களும் ஷுப்மன் கில் 21 ரன்களும் எடுத்தனர். இதன் மூலன் இந்திய அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது கேள்விக்குறி தான் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.