ஒரே நேரத்தில் 3 அணிகள், வட்ட வடிவில் மைதானம்! ஐஐடி சென்னை கண்டுபிடித்த புதிய விளையாட்டு ஃபைபால்
செய்தி முன்னோட்டம்
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஃபைபால் (Phiball) என்ற முற்றிலும் புதிய போட்டி விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாக்கி லெஜண்ட் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளைக் குறிக்கும் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 28 அன்று இந்த விளையாட்டு தொடங்கப்பட்டது. வழக்கமான இரு அணிகள் மோதும் விளையாட்டுகளுக்கு மாற்றாக, ஒரே நேரத்தில் 3 அணிகள் மோதும் இன்வேஷன் ஸ்போர்ட் (Invasion Sport) வகையை சேர்ந்ததாக இந்த விளையாட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலக்குகள்
வட்ட வடிவ மைதானம் மற்றும் 3 கூடை இலக்குகள்
ஃபைபால் விளையாட்டு 26 மீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவ மைதானத்தில் விளையாடப்படுகிறது.
மைதானம் 120 டிகிரி அளவில் மூன்று சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கூடை பொருத்தப்பட்டிருக்கும்.
ஒரு அணியில் 4 தீவிர ஆட்டக்காரர்கள் மற்றும் 3 மாற்றாட்டாளர்கள் என 7 வீரர்கள் இடம்பெறுவர்.
ஒரு அணி எதிரணியின் இரண்டு கூடைகளில் பந்தை போட்டு புள்ளிகள் எடுக்க முயற்சிக்கும் அதே வேளையில், தங்களின் ஒரு கூடையைப் பாதுகாக்க வேண்டும்.
சுழற்சி முறை
சுழற்சி முறை பாதுகாப்பு மற்றும் புள்ளி வழக்கம்
இப்போட்டியில் கடிகார சுற்று முறையில் கூடைகளைப் பாதுகாக்கும் நடைமுறை உள்ளது.
போட்டி மொத்தம் 3 காலிறுதிப் பகுதிகளாக (8 நிமிடங்கள்) நடைபெறும்.
ஒவ்வொரு பகுதிக்குப் பிறகும் அணிகள் தங்களின் பாதுகாப்புக் கூடையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
பந்தைக் கூடைக்குள் போடும் தூரத்தைப் பொறுத்து 1, 2 மற்றும் 3 புள்ளிகள் வழங்கப்படும்.
பந்தை கைபற்றியதும் 24 வினாடிகளுக்குள் புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற ஷாட் க்ளாக் (Shot Clock) விதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மன ஒருங்கிணைப்பு
மன ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பான விளையாட்டு
தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஐஐடி சென்னை புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கிறது என இயக்குநர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.
ஃபைபால் விளையாட்டு வீரர்களின் வேகம், துல்லியமான தகவல் தொடர்பு, உடனடி முடிவு எடுக்கும் திறன் மற்றும் குழுப்பணியை மேம்படுத்தும்.
மைதானத்தின் 3 பிரிவுகளையும் கண்காணிக்க 3 நடுவர்கள் நியமிக்கப்படுவர்.
3x3 கூடைப்பந்து விதிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, விளையாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.