ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!!
புதன்கிழமை (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நாக்பூரில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸை விட தற்போது 21 ரேட்டிங் புள்ளிகள் பின்தங்கி 846 புள்ளிகளுடன் உள்ளார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 803 ரேட்டிங் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். மேலும் ஜடேஜா 702 ரேட்டிங் புள்ளிகள் பெற்று 16வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அரைசதம் அடித்த ஜடேஜா, டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 424 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங்கிலும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின் 358 ரேட்டிங் புள்ளிகளுடன் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதற்கிடையே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த ரோஹித், 786 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார் விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சையில் இருந்து வரும் இந்திய வீரர் ரிஷப் பந்த் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 789 ரேட்டிங் புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.