ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்
ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஹாக்கி போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இந்த உலகக்கோப்பை கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கோப்பையானது இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாடு அலுவலர்கள் அனைவரும் இணைந்து ஹாக்கி கோப்பையை வரவேற்றனர். இதனையடுத்து இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் ஹாக்கி உலகக்கோப்பையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய முறையில் கோப்பைக்கு வரவேற்பு
பின்னர், ஸ்டாலின் அந்த கோப்பையை விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர்களால் இந்த கோப்பை அண்ணா பல்கலைக்கழகம், வைஷ்ணவா மகளிர் கல்லூரி போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்கு மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய முறை வரவேற்போடு எடுத்து செல்லப்படவுள்ளது. அதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை கேரள ஹாக்கி நிர்வாகிகளிடம் ஒப்படைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.