ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது முக்கிய இந்திய வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது அணி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார். இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை குறித்து ஐபிஎல் அணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருந்தாலும், அவற்றை அணி உரிமையாளர்கள் அதைப் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது என ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் மார்ச் 31 முதல் மே 28 வரை நடக்க உள்ளது. இதற்கடுத்த ஒரு வாரத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. மேலும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையும் அடுத்தடுத்து நடக்க உள்ளன.
காயத்தால் இந்திய அணிக்கு பாதிப்பு
இந்திய அணி தற்போது பல காயங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த பயங்கர கார் விபத்தில் உயிர் பிழைத்த ரிஷப் பந்த் இந்த ஆண்டு விளையாடமாட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீளாததால் ஐபிஎல்லின் முதல் பாதியை இழக்க நேரிடும். வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயத்திலிருந்து மீள நீண்ட காலம் போராடி வருகின்றனர். இது அணியின் கேப்டன் ரோஹித்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீரர்களின் உடல்தகுதியை பேண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.