ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் குவைத்தை வீழ்த்தியது இந்தியா
2026 ஃபிஃபா உலகக்கோப்பை இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குவைத்தில் உள்ள ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடிய நிலையில், இந்திய கால்பந்து அணியின் மன்வீர் சிங் 75வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், அதன் பிறகு குவைத் ஒரு கோலும் அடிக்காததால் இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நவம்பர் 21ஆம் தேதி புவனேஸ்வரில் ஆசிய சாம்பியனான கத்தாரை இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று விபரம்
இரண்டாவது ஏஎப்சி தகுதிச் சுற்று ஆட்டத்தில் மொத்தம் 36 அணிகள் 9 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் குழு ஏ இல் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2027 ஆம் ஆண்டு ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும். இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை ஒருமுறை கூட ஃபிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியதில்லை. எனினும், இந்த முறை தனது சோக வரலாற்றை மாற்றும் நம்பிக்கையுடன் உள்ளது.