
துப்பாக்கி சைகைக்கும் அதற்கும் தொடர்பில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஐசிசியிடம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின்போது தான் செய்த கொண்டாட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று நடைபெற்ற ஐசிசி விசாரணையில் விளக்கம் அளித்தார். ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஃபர்ஹான் ஆகியோரின் தூண்டிவிடும் சைகைகள் குறித்து பிசிசிஐ புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றது. இந்த துப்பாக்கி போன்ற சைகை, தனது பூர்வீகப் பகுதியான பதான் கலாச்சாரத்தில் ஒரு பொதுவான வெளிப்பாடு என்றும், திருமணங்கள் போன்ற கொண்டாட்டங்களின்போது இது பரவலாகப் பயன்படுத்தப்படும் என்றும் ஃபர்ஹான் வாதிட்டார்.
இந்திய வீரர்கள்
இந்திய வீரர்களும் கடந்த காலத்தில் செய்ததாக வாதம்
தனது கூற்றை ஆதரிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இதேபோன்ற சைகைகளைச் செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 34 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டிய பிறகு ஃபர்ஹான் இந்தச் சைகையைச் செய்தார். அணியின் மற்றொரு வீரரான ஹாரிஸ் ரவுஃப் செய்த 6-0 சைகை மற்றும் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது போன்ற செயல்பாடும் அரசியல் பதட்டங்களை எதிரொலிப்பதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. இந்நிலையில், ஹாரிஸ் ரவுஃப்பிறகு அவரது செயலுக்காக போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், அவரை ஐசிசி எச்சரித்துள்ளது.