ஐபிஎல் 2023இல் களமிறங்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார். 2022 பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் டி20 தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சையின் போது, அவருக்கு முதுகுவலியும் ஏற்பட ஐபிஎல் 2022இல் பங்கேற்கவில்லை. பின்னர் காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்பிய போதிலும், முதுகில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். மூன்று ஓவர்கள் வீசிய பிறகு அவரால் தொடர முடியவில்லை. இந்நிலையில், சாஹர் தனது அனைத்து காயங்களில் இருந்தும் முழுமையாக மீண்டு விட்டார்.
தீபக் சாஹரின் டி20 கிரிக்கெட் செயல்திறன்
தீபக் சாஹர் தனது முதல் டி20 போட்டியில், ஜூலை 2018 இல் பிரிஸ்டலில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியானார். இதுவரை 24 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள தீபக் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த எண்ணிக்கையில் ஒரு இன்னிங்சில் எடுத்த ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும். தீபக்கின் கடைசி டி20 ஆட்டம் அக்டோபர் 2022 இல் இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டு இந்திய பந்துவீச்சாளர்களில் தீபக் சாஹரும் ஒருவர். அவர் நவம்பர் 2019 இல் வங்கதேசத்திற்கு எதிராக போட்டியின்போது இந்த சாதனையை செய்தார். இது தவிர ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலிமையான பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.