
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; 14 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ், தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தோள்பட்டை விலகல் காரணமாக ஆஷஸ் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 36 வயதான வோக்ஸ் இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளார். கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 122 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 396 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 3,500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை வென்ற வீரர்
ஓவல் மைதானத்தில் நடந்த அவரது இறுதிப் போட்டியிலும், அணியைக் காப்பாற்றுவதற்காக ஒரு கையில் ஸ்லிங் கட்டப்பட்ட நிலையில் களமிறங்கி அவர் விளையாடியது, ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக அமைந்தது. தனது ஓய்வு அறிக்கையில், இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது தன் வாழ்நாள் கனவு என்றும், தனது குடும்பத்தினர், அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வோக்ஸ் கூறினார். 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதைக் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களாக அவர் சுட்டிக் காட்டினார்.