கிங் கோலி ஒரு அசாத்திய சாதனையாளர்: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய யுனிவர்ஸ் பாஸ் கெயில்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஜாம்பவான் கிறிஸ் கெயில் (Chris Gayle), இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரின் போது அளித்த நேர்காணலில் பேசிய அவர், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியில் கோலியுடன் நீண்ட காலம் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்ட கெயில், அவரை ஒரு நிகரற்ற மேதை என வர்ணித்துள்ளார்.
வாழும் லெஜண்ட்
கோலியைப் புகழ வார்த்தைகளே இல்லை
கோலி குறித்துப் பேசிய கிறிஸ் கெயில், "அவர் ஒரு வாழும் லெஜண்ட் மிகவும் தனித்துவமானவர், ஃபினாமினல் (Phenomenal). அவரைப் புகழ்ந்து பேச என்னிடம் வேறு வார்த்தைகளே இல்லை.
கிரிக்கெட் உலகமே அவரை கிங் கோலி என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை. கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது.
சர்வதேச கிரிக்கெட் களத்தில் அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
சர்வதேச அளவில் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் அவர் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விராட் கோலி
ஒருநாள் அரங்கில் அசைக்க முடியாத ரன் மெஷின்
இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 69.00 சராசரியுடன் 552 ரன்களைக் குவித்து அபார ஃபார்மில் உள்ளார். இதில் 2 சதங்களும் 3 அரைசதங்களும் அடங்கும்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 55 சதங்கள், 79 அரைசதங்களுடன் 15,109 ரன்கள் குவித்து இரண்டாவது அதிகபட்ச ரன் குவித்த வீரராகத் திகழும் கோலி, 2027 ஒருநாள் உலகக்கோப்பையை இலக்காகக் கொண்டு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
வரலாற்று வெற்றி
ஷாய் ஹோப்புக்கு கெயில் பாராட்டு
இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திப் பிடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்த வரலாற்று வெற்றி குறித்தும் கெயில் கருத்து தெரிவித்தார்.
45 பந்துகளில் சதமடித்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் 37 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய ரூதர்போர்டு ஆகியோரைப் பாராட்டிய அவர், "இந்தியாவின் தட்டையான ஆடுகளங்கள் மற்றும் பனிப்பொழிவு (Dew) காரணமாக பந்துவீச்சாளர்களுக்கு நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது
240, 250 ரன்கள் கூட டி20 கிரிக்கெட்டில் எளிதாக சேஸ் செய்யப்படுகிறது. இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறினார்.