நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13வது இந்தியர் : சாதனை படைக்கும் புஜாரா!
இந்திய அணியின் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை செய்கிறார். புஜாரா, இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக உள்ளதோடு, சமீபத்தில் 7,000 ரன்களை கடந்தார். 2010 ஆம் ஆண்டு தனது டெஸ்டில் அறிமுகமான புஜாரா, ராகுல் டிராவிட்டின் சர்வதேச ஓய்வுக்குப் பிறகு அணியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருந்தாலும், அவரது ஒட்டுமொத்த சாதனை அவரை இன்னும் முன்னணியில் வைத்துள்ளது.
டெஸ்டில் 100வது போட்டியில் விளையாடும் 13வது இந்திய வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதன் மூலம், 100 டெஸ்டில் விளையாடும் 13வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை புஜாரா பெற உள்ளார். இதற்கு முன்பாக சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண், அனில் கும்ப்ளே, கபில்தேவ், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், கங்குலி, கோலி, இஷாந்த் சர்மா, சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். புஜாரா தற்போது டெஸ்டில் 7,021 ரன்களை குவித்துள்ளார். 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் இதில் அடங்கும். இதில் மூன்று இரட்டை சதங்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட பெருமையைப் பெற்றுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே இந்திய வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.