இந்தியா vs பிரேசில் கால்பந்து: நட்புப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
இந்திய கால்பந்து வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக, ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் மற்றும் இந்திய அணிகள் மோதிய முதலாவது சீனியர் ஆடவர் சர்வதேச நட்பு கால்பந்து ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட் லேக் விவேகானந்தா யுவபாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 28-வது நிமிடத்தில் எஸ்தேவோ, 42-வது நிமிடத்தில் பெட்ரோ கோல் அடிக்க, முதல் பாதியில் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் களமிறங்கிய சாமுவேல் டயஸ் லினோ 58 மற்றும் 95-வது நிமிடங்களில் இரட்டை கோல்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
டிக்கெட் கட்டணம்
காலியாகக் கிடந்த இருக்கைகள்
கால்பந்து விளையாட்டின் மெக்காவாகக் கருதப்படும் கொல்கத்தாவில் பிரேசில் அணி களமிறங்கிய போதிலும், மைதானத்தில் பல இருக்கைகள் காலியாகக் காணப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
85,000 பேர் அமரக்கூடிய சால்ட் லேக் மைதானத்தில் வெறும் 51,402 ரசிகர்கள் மட்டுமே போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.
இதற்கு முக்கியக் காரணமாக ரூ.3,500 முதல் ரூ.6,000 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்படியான டிக்கெட் கட்டணமே காரணம் என கால்பந்து ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய ரசிகர்களை உள்நாட்டு கால்பந்தை நோக்கி ஈர்க்கும் நோக்கத்துடன் ஆசியான் கோப்பையில் இருந்து விலகி, கோடிக்கணக்கில் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் எதிர்பார்த்த கூட்டம் கூடாதது அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கள நிலவரம்
இந்திய அணியின் போராட்டம்
ரியல் மாட்ரிட் நட்சத்திரம் வினிசியஸ் ஜூனியர் பிரேசில் அணிக்காகத் தொடர்ந்து ஃபார்ம் இன்றித் தவிப்பது இப்போட்டியிலும் தொடர்ந்தது.
மறுபுறம் இந்திய அணியின் அனுபவமிக்க கேப்டனும் கோல்கீப்பருமான குர்ப்ரீத் சிங் சந்துவின் செயல்பாடு ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்தது.
மாற்று கோல்கீப்பர் பிரப்சுகன் சிங் கில்லும் நான்காவது கோலின் போது தவறிழைத்தார்.
இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமீலின் கீழ் களமிறங்கிய இந்திய அணி, பிரேசிலின் 66% பந்து கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் 9 ஷாட்களை அடித்து ஓரளவு சமபலத்துடன் போராடியது.
பனாமாவிற்கு எதிரான ஆட்டத்தைத் தொடர்ந்து இந்திய அணி வலுவான எதிரணிக்கு எதிராக வெளிப்படுத்திய இந்த ஆட்டம், சர்வதேச தரத்திலான போட்டிகளில் தன்னம்பிக்கையை வளர்க்கும் முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.