மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்! பிசிசிஐ அதிரடி முடிவு!
பிசிசிஐ மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் அசோசியேட் நாட்டைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒரு கிரிக்கெட் வீராங்கனையுடன் ஆடும் லெவன் அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடும் லெவன் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதால், அசோசியேட் நாட்டு வீராங்கனையை சேர்ப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது. மகளிர் டி20 லீக் போட்டிகளை நடத்தும் எந்த ஒரு நாடுகளும் இதுபோல் இதற்கு முன்பு செய்ததில்லை. இதற்கிடையே, ரோஜர் பின்னி தலைமையிலான பிசிசிஐ, மகளிர் ஐபிஎல்லுக்கான சம்பள வரம்பாக ரூ.12 கோடியை நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 4 முதல் மகளிர் ஐபிஎல் தொடக்கம்
மகளிர் ஐபிஎல் முதல் சீசன் இந்த ஆண்டு தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டாலும், போட்டியின் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் மகளிர் ஐபிஎல் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் என்றும், இறுதிப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து போட்டிகளும் மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மட்டுமே வைத்து நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அணிகளைப் பொறுத்தவரை, பிசிசிஐ வரும் ஜனவரி 25 அன்று மூடிய ஏல செயல்முறையின் மூலம் இறுதி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.