FIDE ரேட்டிங்கில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி
இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) அன்று ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார். செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு பாரம்பரிய செஸ்ஸில் மதிப்புமிக்க 2800 எலோ மதிப்பீட்டைத் தாண்டிய இரண்டாவது இந்தியரானார். 2801 மதிப்பீட்டுடன் எரிகைசி இப்போது ஹிகாரு நகமுராவுக்கு (2802) பின்னால் சமீபத்திய சர்வதேச செஸ் தரவரிசையான FIDE தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். கர்நாடகாவின் வாரங்கல்லைச் சேர்ந்தவரான அர்ஜூன் எரிகைசி ஆண்டு முழுவதும் அபாரமாக செயல்பட்டார். 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி தனிநபர் மற்றும் குழு தங்கப் பதக்கங்களை வென்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு பாராட்டு
உலக செஸ் நிர்வாக அமைப்பான FIDE, இந்த சாதனையை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தளத்தில், "அர்ஜூன் எரிகைசி வரலாற்றில் 2800 எலோ தடையை உடைத்த 16வது வீரர் ஆவார்" என்று கூறியுள்ளது. எரிகைசி தனது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 14 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் பெற்றார். மேலும் செப்டம்பர் 2024 இல், அவர் இந்தியாவின் சிறந்த தரவரிசை வீரரானார். சர்வதேச அளவில், தரவரிசையில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2831 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா 2805 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையில், இந்திய சதுரங்கம் தொடர்ந்து பிரகாசிக்கிறது. 18 வயதான டி குகேஷ் 2783 உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.