LOADING...
ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...
ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் மொஹ்சின் நக்வி

ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2025
09:57 am

செய்தி முன்னோட்டம்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ACC அலுவலகத்திலிருந்து நேரில் வந்து கோப்பையை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 30) ​​செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை விருது நிகழ்வில் மொஹ்சின் நக்வி தலைமையிலான ACC குழு வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறியதும் குழப்பம் ஏற்பட்டது. இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, மேடைக்கு அழைக்கப்படுவதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது. எனினும் பின்னர் இந்தியா, நக்வி கையில் கோப்பையை வாங்க மறுத்துவிட்டது.

காரணம்

கோப்பையை பெற மறுத்த இந்திய அணி

பாகிஸ்தானுடனான இந்தியாவின் புவிசார் அரசியல் உறவில் சிக்கல் நிலவுவதால், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்கப் போவதில்லை என்று இந்திய அணி கூறியிருந்தது. மேலும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரிடம் கோப்பையை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நக்வி அந்தக் கோரிக்கையை மறுத்து, இந்தியா கோப்பையை தன்னிடமிருந்து பெற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்திய அணி மேடையில் ஏற காத்திருந்தபோது, ​​ACC அதிகாரிகளில் ஒருவர் கோப்பையை மைதானத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் காணக்கூடிய அபத்தமான காட்சிகள் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைகியா, நக்வியின் செயல்களுக்காக அவரை கடுமையாக சாடினார்.

கோரிக்கை

பிசிசிஐயின் கோரிக்கையை மொஹ்சின் நக்வி நிராகரித்தார்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் ஊடகங்கள், 2025 ஆசியக் கோப்பை கோப்பையை ஒப்படைக்க வேண்டும் என்ற பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவின் தொடர்ச்சியான கோரிக்கையை மொஹ்சின் நக்வி நிராகரித்ததாகவும், கோப்பையை இந்தியக் கேப்டன் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் செய்தி வெளியிட்டன. துபாயில் நக்வி தலைமையில் நடைபெற்ற வழக்கமான ACC கூட்டத்தின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. கோப்பையை ஒப்படைக்குமாறு சுக்லா பலமுறை வலியுறுத்தினார். இருப்பினும், இந்தப் பிரச்சினை ACC கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று நக்வி பதிலளித்தார். மேலும் வலியுறுத்திய பிறகு, இந்திய அணி கோப்பையை விரும்பினால், அதன் கேப்டன் ஏ.சி.சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அதைப் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.