Loading...
15 வயதில் பீகார் அணியின் கேப்டன்: வைபவ் சூர்யவன்ஷி படைக்கும் புதிய உலக சாதனை
பீகார் டி20 கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

15 வயதில் பீகார் அணியின் கேப்டன்: வைபவ் சூர்யவன்ஷி படைக்கும் புதிய உலக சாதனை

எழுதியவர் Vasuki
Nov 07, 2026
12:27 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடருக்கான பீகார் மாநில அணியின் கேப்டனாக, 15 வயதே நிரம்பிய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு புதிய சரித்திரம் படைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 14 அன்று இந்தூரில் சௌராஷ்டிரா அணிக்கு எதிராகக் களம் காணும் முதல் லீக் ஆட்டத்தில் பீகார் அணியை வழிநடத்துவதன் மூலம், உலக டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (15 ஆண்டுகள், 232 நாட்கள்) ஒரு அணியை வழிநடத்தும் இளம் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் தன் வசமாக்க உள்ளார். பீகார் கிரிக்கெட் சங்கத்தின் இந்த அதிரடி முடிவு விளையாட்டு வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி

முந்தைய சாதனைகளை தகர்த்த இளம் புயல்

சர்வதேச அளவில் குரோஷிய அணியை 17 ஆண்டுகள் 311 நாட்களில் வழிநடத்திய சாக் வுகுசிக்கின் உலக சாதனையை வைபவ் முறியடிக்கவுள்ளார்.

மேலும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியை 18 வயதில் வழிநடத்திய மஹிபால் லோம்ரோரின் சாதனையும் இதன் மூலம் சுக்குநூறாக உடைகிறது.

நடப்பு சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கிழக்கு மண்டல துலீப் கோப்பை அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட வைபவ், அபாரமான பேட்டிங் திறமையும் ஆட்ட நுணுக்கமும் கொண்டவர்.

அவரது தலைமைப் பண்பின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ்வர்தன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது இளம் வீரர்களுக்கு ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தகட்ட பயணம்

ஆசிய கோப்பை அழைப்பும் இந்திய அணியும்

அதேவேளையில், கத்தாரில் நடைபெறவுள்ள வளரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார்.

திலக் வர்மா தலைமையில் ரஜத் படிதார், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் களம் காணும் இந்த தொடர் நவம்பர் 19 முதல் 29 வரை நடைபெறுகிறது.

இதன் காரணமாக, சையத் முஷ்டாக் அலி தொடரில் பீகார் அணிக்காக முதல் இரண்டு லீக் போட்டிகளில் மட்டுமே அவரால் கேப்டனாகக் களமிறங்க இயலும்.

அதன்பின் தேசியக் கடமைக்காகப் புறப்படும் வைபவ், பீகார் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் பட்சத்தில் மீண்டும் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT