சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்துள்ளார். திங்களன்று (பிப்ரவரி 20) அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முக்கியமான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 போட்டியில் ஹர்மன்ப்ரீத் இந்த சாதனையை எட்டினார். 3,000 ரன்களை கடந்த 4வது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் ஆவார். ஹர்மன்பிரீத் தனது 150வது போட்டியில் (135 இன்னிங்ஸ்) 3,000 ரன்களை கடந்துள்ளார். அவர் சுசி பேட்ஸ் (3,820), மெக் லானிங் (3,346), மற்றும் சாரா டெய்லர் (3,166) ஆகியோருடன் ரன்களின் அடிப்படையில் இணைந்துள்ளார்.
150 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் கிரிக்கெட்டர்
ஹர்மன்ப்ரீத் கவுர் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் 150 சர்வதேச டி20 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பு யாரும் 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. இதற்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா அதிக போட்டிகள் (148) விளையாடி உள்ளார். வேறு எந்த ஆடவர் கிரிக்கெட் வீரரும் 125க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி, ஹர்மன்பிரீத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மேலும் இங்கிலாந்தின் டேனியல் வியாட் 141 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.