LOADING...
ஆஷஸ் தொடருக்குத் தயாராக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்

ஆஷஸ் தொடருக்குத் தயாராக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 03, 2025
07:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் சர்வதேசத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் மதிப்புமிக்க 2025/26 ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக அவர் உள்நாட்டு ஷெஃபீல்ட் ஷீல்ட் (Sheffield Shield) போட்டியில் விளையாடவுள்ளார். இந்தியத் தொடரில் இருந்து விடுவிக்கப்படும் இரண்டாவது முக்கிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆவார். முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் டிராவிஸ் ஹெட்

இடது கை ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட், அடுத்த வாரம் ஹோபார்ட்டில் டஸ்மேனியாவுக்கு எதிராகத் தனது சொந்த மாநில அணியான தெற்கு ஆஸ்திரேலியாவுக்காகக் களமிறங்கவுள்ளார். கடந்த ஜூலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு அவர் சிவப்புப் பந்து போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். வெள்ளைப்பந்து போட்டிகளில் டிராவிஸ் ஹெட் சமீப காலமாகச் சிறப்பாகச் செயல்படவில்லை. கடைசியாக விளையாடிய எட்டு இன்னிங்ஸ்களில் அவர் 143 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டிராவிஸ் ஹெட் மட்டுமின்றி, ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயன், கேமரூன் கிரீன் உள்ளிட்ட மற்ற ஆஸ்திரேலிய சர்வதேச வீரர்களும் ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.