கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்; இனி யூடியூபில் SD வீடியோக்களையும் HD தரத்தில் வெளியிடலாம்
செய்தி முன்னோட்டம்
யூடியூப் நிறுவனம், அதன் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் வீடியோக்களைத் தானாகவே மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த தரத்தில் (SD) பதிவேற்றப்பட்ட வீடியோக்களைக்கூட, இனி உயர் தெளிவுத்திறன் (HD) கொண்ட தரத்திற்குக் கொண்டு வர இந்த ஏஐ கருவி உதவும். இந்த அம்சம் அக்டோபர் 29 முதல் படிப்படியாக வெளியிடத் தொடங்கியுள்ளதுடன், விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கப்பெறும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம், தொடக்கத்தில் 1080p அல்லது அதற்குக் குறைவான தெளிவுத்திறன் கொண்ட SD வீடியோக்களை HD தரத்திற்கு மாற்றும். எதிர்காலத்தில், 4K தர மேம்பாட்டு (upscaling) விருப்பத்தையும் சேர்க்க யூடியூப் திட்டமிட்டுள்ளது.
பட்ஜெட்
பட்ஜெட் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம்
இதன் மூலம், தரமான கேமராக்கள் இல்லாமல் பட்ஜெட் ஃபோன்களைப் பயன்படுத்தும் உள்ளடக்க உருவாக்குநர்கள் கூட, விலையுயர்ந்த DSLR கருவிகள் தேவையின்றி உயர்தர காட்சிகளைப் பெற முடியும். பார்வையாளர்கள் விரும்பினால், வீடியோக்களை அதன் அசல் தெளிவுத்திறனிலேயே பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏஐ மேம்பாட்டிற்குப் பக்கபலமாக, யூடியூப் தனது வீடியோக்களின் சிறுபடம் (Thumbnail) கோப்பு அளவின் வரம்பை 2MB இலிருந்து 50MB ஆக கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு, உள்ளடக்க உருவாக்குநர்கள் 4K தெளிவுத்திறன் கொண்ட சிறுபடங்களைப் பதிவேற்ற அனுமதிக்கும். இதனால், உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களுக்கு இணையாகச் சிறந்த காட்சித் தரத்தை வழங்க முடியும். இந்தச் அம்சம் உள்ளடக்க உருவாக்கத்தில் உள்ள தொழில்நுட்பத் தடையை நீக்கவும் உதவும்.