வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி விரைவில் சாத்தியமாகலாம்?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது. மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய (Cross-compatibility) தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்திய நிலையில், தற்போது அதன் முக்கியப் போட்டியாளரான வாட்ஸ்அப் அதே அம்சத்தை சோதித்து வருவது தெரிய வந்துள்ளது. WaBetaInfo இன் தகவலின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் அரட்டை போன்ற பிற மெசேஜிங் தளங்களில் உள்ளவர்களுடன் குறுஞ்செய்தி அனுப்பும் அம்சத்தை ஐரோப்பாவில் உள்ள பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வந்தால், வாட்ஸ்அப் பயனர்கள் அரட்டை செயலியைத் திறக்காமலேயே அதில் உள்ளவர்களுடன் உரையாடலைத் தொடர முடியும்.
யுபிஐ
யுபிஐ மாதிரியான நடைமுறை
கடந்த செப்டம்பரில், ஸ்ரீதர் வேம்பு, மெசேஜிங் செயலிகளுக்கிடையேயான தகவல்தொடர்பு நெறிமுறைகளை யுபிஐ போல ஒருங்கிணைப்பதற்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இந்த அமைப்புகள், வாட்ஸ்அப்பைப் போல மூடப்பட்ட அமைப்புகளாக இல்லாமல், யுபிஐ மற்றும் மின்னஞ்சல் போலச் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், வாட்ஸ்அப் இந்த அம்சத்தைச் சோதிப்பதற்கு முக்கியக் காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைச் சட்டம் (Digital Markets Act - DMA) தான்.
சட்டம்
ஐரோப்பிய சட்டத்தின் பின்னணி
இந்தச் சட்டம், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், வாட்ஸ்அப் போன்ற பெரிய மெசேஜிங் தளங்கள் மற்ற சேவைகளுக்குத் திறந்த தகவல் தொடர்பு வழிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதனால்தான் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை உருவாக்கி சோதித்து வருகிறது. எனினும், இந்த அம்சம் தற்போது ஐரோப்பியச் சந்தைக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், இந்த வசதியை இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.