கிரீன் கார்டு திட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தடை: அமெரிக்காவிற்கு நாஸ்காம் பதிலடி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை வழங்கும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) கிரீன் கார்டு திட்டத்தில் இருந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு ஊழியர்கள் பறிப்பதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் முன்னணி ஐடி வர்த்தக அமைப்பான நாஸ்காம் தனது வலுவான பதிலை அளித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
பதில்
நாஸ்காம் அமைப்பு அமெரிக்காவிற்கு அளித்துள்ள பதில்
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியேற்றம் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களின் இடப்பெயர்ச்சி ஆகிய இரண்டும் இரு வேறுபட்ட விஷயங்களாகும்.
இவற்றை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது" எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட ஒரு குடியேற்ற வழித்தடத்தை மட்டுமே இந்த முடிவு பாதிக்கும் என்றும், அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் செயல்பட்டு வருவதாகவும் நாஸ்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூர் வேலைவாய்ப்புகள்
அமெரிக்காவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உயர்த்திய இந்திய நிறுவனங்கள்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்களை சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன.
அதற்குப் பதிலாக அமெரிக்காவிலேயே உள்ளூர் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி, அங்கு வலுவான உள்நாட்டு பணியாளர்களைக் கட்டியெழுப்பியுள்ளன.
மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் மற்றும் கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன என்றும் நாஸ்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச்சாட்டு பின்னணி
அமெரிக்க அரசின் குற்றச்சாட்டும் தடையின் பின்னணியும்
அமெரிக்காவின் மோசடி எதிர்ப்பு பணிக்குழுவின் கீழ், தொழிலாளர் துறை செயலாளர் கீத் சோண்டர்லிங் இந்த இடைநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2009 முதல் இந்த நிறுவனங்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான எச்-1பி விசாக்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான நிரந்தர தொழிலாளர் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை காரணமாக புதிய PERM விண்ணப்பங்களோ அல்லது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களோ இனி பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.