X தளத்தில் 'ட்வீட்' என்ற சொல்லை 'போஸ்ட்' என மாற்றும் எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கின் தலைமையில் X என்ற புதிய பிராண்டிங்கின் கீழ் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது ட்விட்டர் நிறுவனமும், சமூக வலைத்தளமும்.
ட்விட்டர் என்பது ஒரு சமூக வலைத்தளம் என பயனாளர்கள் மத்தியில் ஆழப் பதிந்திருப்பதாகக் கூறி X என்று அத்தளம் மற்றும் நிறுவனத்தின் பெயர்களை மாற்றி ரீபிராண்டிங் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமல்லாமல், வணிகம், கேமிங், ஸ்ட்ரீமிங், கட்டண சேவை என பலவித சேவைகளை ஒரே இடத்தில் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காகவே இந்த மாற்றங்கள் என தன்னுடைய புதிய திட்டத்தினை விளக்கியும் கூறியிருக்கிறார் எலான் மஸ்க்.
ட்விட்டர்
அதிருப்தியில் 'ட்விட்டர்' ரசிகர்கள்:
இணையத்தில் பயன்படுத்தப்படும் பிற சமூக வலைத்தளங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு ட்விட்டருக்கு இருந்தது. அதாவது, ட்விட்டர் என்ற பெயரை மையப்படுத்தியே, ட்வீட் மற்றும் ரீட்வீட் ஆகிய வார்த்தைகள் ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டன.
ட்விட்டரின் இருப்பு தான் மேற்கூறிய வார்த்தைகளின் பயன்பாட்டிற்கான ஆதாரம். தற்போது அந்த ட்விட்டரின் பெயரே மாற்றப்பட்ட பிறகு, மேற்கூறிய வார்த்தைகளுக்கான தேவை என்ன இருக்கிறது?
எனவே, ட்வீட் மற்றும் ரீட்வீட் ஆகிய பெயர்களை X தளத்தில் போஸ்ட் மற்றும் ரீபோஸ்ட் என மாற்றப்பட்டு வருகிறது.
ட்விட்டரின் இந்த மாற்றங்களால், அத்தளத்தின் பயனர்கள் மிகவும் அதிருப்தியில் இருப்பதை அவர்களின் பதிவுகள் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. சிலர் இந்த மாற்றங்களை நிராகரிப்பதாகக் கூறி செயலியை அப்டேட் செய்யாமலும் இருந்து வருகின்றனர்.